Friday, February 11, 2011

அழகு - பூமியும் அதில் வாழும் மக்களும்...

நாம் வாழும் இந்த யுகம் மிகவும் அசாதாரமான ஒன்று என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
காரணம், பூமி தன் வாழ் நாள் முழுவதும் கண்ட மாற்றத்தை விட கடந்த ஐம்பது வருடங்களில் கண்ட மாற்றம் தான் மிக மிக வலியதாம்.

அழிந்து வரும் காடுகள், பெருகி வரும் நகர பரப்பளவு, நாம் தினம் தினம் கரைக்கும் இயற்கை வளங்கள், வாகனங்களும் உற்பத்திச்சாலைகளும் கக்கும் புகை இவையெல்லாம் நம் பூமியின் வாழ்நாளை குறைக்கும் காரணிகலாம்.

நாம் வாழும் வாழ்க்கைப் பாணியை மாற்றி, மீதமிருக்கும் இயற்கை வளங்களை இழந்துவிடாமல் தடுக்க, பூமியின் தட்ப வெட்பநிலை மாற்றத்தால் நிகழும் வெள்ளம் பூகம்பம் சுனாமி போன்றவற்றை குறைக்க,  இன்னும் பத்து வருடங்கள் தான் இருக்கிறதென கணித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

மேற்சொன்னவற்றை உலகிற்கு உணர்த்த "The Home Project" என்றொரு செயல் திட்டத்தை நிறுவி மூன்று வருட உழைப்பு, ஐம்பது நாடுகளில் நூத்தி இருபது இடங்களின் மேல் பறந்து "Home" என்ற இந்த குறும் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

உயிர் இந்த பூமியில் வந்ததெப்படி, வாழ கற்றதெப்படி, மாற்றங்கள் கண்டதெப்படி என்பதில் ஆரம்பித்து ஆப்பிரிக்க காடுகள், அலாஸ்காவின் பனி உறைந்த ஏரிகள், துபையின் செயற்கை தீவு, அன்டார்டிக்காவின் பனிப் பாளங்கள், வட துருவத்தில் கரைந்து கொண்டிருக்கும் பனி, வறுமையில் வாடும் பங்களாதேஷ்ல் வெள்ளத்தில் மூழ்கிய வயல்கள், சிலி தீவில் குமுறும் எரிமலைகள், ஹைதியில்(Haiti) மண் சரிவினால் காணாமல் போகும் மலைகள், நடுக்கடலில் காற்றாலைகள் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்யும் டென்மார்க்.. இவை மட்டுமல்லாமல் சீனா, தென் கொரியா, கோஸ்ட்டா-ரீக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், க்ரீஸ், முரீசியஸ் தீவுகள், இந்தியா, இந்தோனேசியா, ஐஸ்லாந்து, ஜப்பான், போட்ஸ்வனா, பிரேசில், கனடா மற்றும் பல நாடுகளில் நம்மை கொண்டு சேர்க்கிறது இந்தப் படம்.

பிரமிப்பூட்டும் கோணங்களில் சுழல்கிறது முழு படமும். படம் முழுவதுமே ஹெலிகாப்டர்களில்  பறந்து படமாக்கியிருக்கிறார்கள். ஹெலிகாப்டரின் முன் பகுதியில் இறுகப்பற்றிக்கொள்ளும் 'CineFlex' எனப்படும் அதி நவீன காமெராவை பயன்படுத்தி தான் இந்த திரை ஜாலம் செய்தார்களாம்.

யான் ஆர்தஸ் - பேர்ட்ராண்ட்(Yann Arthus-Bertrand) என்ற பிரெஞ்சு நாட்டு புகைப்படக்காரர் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

படத்தை பற்றிய அனுபவங்களை அவர் கூறுகையில், முதல் வருடம் பல்வேறு நாடுகளைச் சுற்றி வந்து அந்தந்த நாட்டில் தாங்கள் படம் பிடிக்க அனுமதி கேட்டே அலைந்தார்களாம்.  இதில் இந்திய அரசாங்கத்திடம் அனுமதி வாங்க அலைந்ததைப் பற்றிச் சொல்லி புலம்பி இருக்கிறார் மனுஷன். ராணுவம், வெளியுறவுத்துறை, தூதரகம், விமானப்படை, அரசியல்வாதிகள்  என முன்னும் பின்னும் இவரை அலைக்கழித்து இறுதியில் தான் அனுமதி அளித்ததாம் இந்திய அரசாங்கம்(வாழ்க இந்தியா!). மேலும் சில நாடுகளில், இவர் படம்பிடிக்க பயன்படுத்திய கேமராவால் அனுமதி மறுத்தார்களாம். காரணம், இந்த கேமராக் கண்கள் பயன்படுத்தும் High-Definition(HD) தொழில்நுட்பம் கொண்டு சுமாராக ஐம்பது மைல் தூரத்தில் சுண்டி விடப்படும் நாணயத்தில் பூவா தலையா என்பதை துல்லியமாக சொல்லி விடலாமாம். ராணுவ ரகசியங்களை வேவு பார்க்க வந்ததாகவும் துரத்தினார்களாம் இதனால்.

இது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்ப்படுத்த தயாரிக்கப்பட்ட படம். இந்த படம் உருவாக அதற்க்கு பண உதவி செய்ய முன்வந்தது PPR குரூப் என்னும் பிரெஞ்சு நாட்டு நிறுவனம்(நம்மில் பலருக்கு பூமா(Puma) காலணிகள் மற்றும் கூசி(Gucci) என தெரிந்திருக்கும்)

மொத்தம் நாற்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள  இந்த படம், உலகம் முழுவதிலும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. சிறந்த தயாரிப்பு, கேமரா என பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்துக்கொண்டிருக்கிறது.

Youtube தளதில் மட்டும் இரண்டு கோடி முறை பார்க்கப்பட்டிருக்கிறது.

படத்தின் சாராம்சம்...
அழகு - பூமியும் அதில் வாழும் மக்களும்.
பூமியின் அழகை போற்றி பாதுகாப்பதும் அதில் வாழும் மக்களின் பொறுப்பு தான்.

சுமாராக ஒன்றரை மணி நேரம் ஓடும் இந்த படம் கண்டிப்பாக நாம் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று.
இதோ உங்கள் பார்வைக்கு...

http://www.youtube.com/watch?v=jqxENMKaeCU

Thursday, February 10, 2011

மலரே ஒரு வார்த்தை பேசு...இப்படிக்கு பூங்காற்று (பயணக் கட்டுரை) -2

பகுதி-1


'இன்னும் முப்பது நிமிடங்களில் நாம் தரையிரங்கிவிடலாம்... உங்கள் இரவு நல்லிரவாக மலரட்டும்.. நன்றி' என்றார் விமானி.


நான் சென்றிறங்கும் இடம் 'டென்னிசீ' மாநிலத்தின் 'மெக்கீ டைசன்(McGhee tyson) விமான நிலையம்'


டென்னிசீ(Tennessee) - அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களிலொன்று. நாற்பத்தி இரண்டாயிரம் சதுர மைல்கள் பரப்பளவு, ஜனத்தொகை - சுமாராக அறுபத்தி இரண்டு லட்சம் பேர்(நம் தமிழகத்தின் பரப்பளவு ஐம்பதாயிரத்து இருநூறு சதுர மைல்கள்... நாம் ஆறே முக்கால் கோடி பேர்(!)).


டென்னிசீ என்றதுமே பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு நினைவில் வரும் பெயர் 1960-களில் புகழ் பெற்ற "எல்விஸ் ப்ரெஸ்லே(Elvis Presley)" என்ற அமெரிக்க பாடகர். இவர் வாழ்ந்து மறைந்தது டென்னிசீ மாநிலத்தின்   மெம்ப்சிஸ்(Memphis) என்னுமிடத்தில்.


என் முந்தைய பதிப்பில், சொல்ல மறந்த முக்கிய நிகழ்வு ஒன்று...

நான் சிகாகோவில் விமானமேறும் சமயம் என் தோளில் இருந்த பையின் எடை அதிகமென்று கூறி, அதிலிருந்த சிலவற்றை மற்றுமொரு பைக்கு என்னை மாற்றச்சொல்லி அறிவுறுத்தினாள் விமானப் பணிப்பெண் ஒருத்தி. என்னுடைய பயண முடிச்சுகளின் பெரும்பகுதி புகைப்படக்கருவிகளும் கண்ணாடிவில்லைகளும் தான். அவை இதோ உங்கள் பார்வைக்கு.

"பெண்ணே நான் ராக் பெல்ளர் குடும்பத்தில் ஒருவனல்ல, இந்த கண்ணாடிவில்லைகள் எனக்கு மிகவும் முக்கியம்" என்றேன். 


என் தோளில் இருந்த பையல்லாமல் மற்றுமொரு பையை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டு, புன்சிரிப்போடு "எங்களால் முடிந்ததைச்  செய்கிறோம் அன்பரே!" என்றாள்.

பயணம் முழுவதுமே,  தேனிலவு பிரயாணத்தில் புது மனைவி பக்கத்தில் உட்காராமல் தவிக்கும் மணாளனின் இதயம் போல் தவித்துக்கொண்டிருந்தது என் இதயமும். காரணம்., என் கண்பார்வையை விட்டு நகரவிட்டதில்லை என் புகைப்பட உபகரணங்களை.


விமானத்தில் இருந்து இறங்கியதுமே, என் பையை தேடத்தொடங்கினேன்.
'அன்பார்ந்த பயணிகளே! உங்களின் வருகைக்கு நன்றி, உங்களின் பயண முடிச்சுகள் இதோ' என்றாள் ஒரு மீன் கண்ணழகி ஒரு ஆளுயர அடுக்கு தட்டைக் காட்டி. 
ஒரு நோட்டதிலேயே உணர்ந்துவிட்டேன் என் பை அதில் இல்லை என்று. மீண்டுமொருமுறை நோட்டம்... கண்டிப்பாக இல்லை. 
'அட முருகா! வெள்ளைக்காரியை நம்பி குடுத்தேனே.. தேவை தான் எனக்கு... ' என்று நொந்து கொண்டிருக்கும் நேரம்....


..."நீங்கள் தானே குமரன்" என்று என் பின்னாலிருந்து ஒரு ஆண் குரல். 


'வேட்டையாடு விளையாடு' கமல் போன்றதொரு மிடுக்கேறிய தோற்றம், ரே-பான் கண்ணாடி, வலது கையில் இரண்டு தேசத்து மணி காட்டும் ராடோ, தன் கோட்டின்(Coat) இடது கையோரம் 'Tommy Hilfiger' என சின்னதொரு முத்திரை என மென் புன்னகையோடு தன் பெயரை வில்லியம் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு கை குலுக்கினார் அந்த நபர். 


"குமரன், நான் தான். நான் நினைப்பது சரியாக இருந்தால்.. நீங்கள் தானே நான் வந்த விமானத்தின் விமானி" என்றேன்(விமானப்பயணம் ஆரம்பிக்கும் போது விமானிகள்.. தங்கள் பெயரையும், தங்கள் துணை விமானிகள் பெயரையும் அறிவித்துக்கொள்வது வழக்கம்.. அப்படி கவனித்ததுதான் இவர் பெயரையும்).


"உங்கள் ஊகம் சரி தான் குமரன்" என்றார்.


நானும் "பத்திரமாக என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்தற்கு நான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் வில்லியம்" என்றேன்.


"நன்றி.. " என்றார் கொஞ்சம் கூட அலட்டல் இல்லாமல்.


"குமரன், இதோ உங்கள் பை. இதில் உடையும் தன்மை வாய்ந்த பொருட்கள் இருப்பதாகவும்., அதை பத்திரமாக வைக்க வேறு இடமில்லாததால், என் குழுவின் பணிப்பெண் ஒருத்தி நான் என் பயண முடிச்சுகளை வைக்கும் பிரத்தியேக இடத்தில் இதையும் வைத்துக்கொள்ளுமாறு வேண்டியிருந்தாள்.. வந்திறங்கியதும் உங்களிடம் ஒப்படைக்க உறுதி கூறினேன்..." என்று கூறி பையை என்னிடம் ஒப்படைத்தார். அடடா! அதுக்குள்ள வெள்ளை தோல் மேல சந்தேக பட்டுடோமே என்று தன்னைத்தானே குட்டிக்கொண்டது என் மூளை.


"மிக்க நன்றி வில்லியம்..." இது நான்.


"உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி..." என்று மீண்டும் கைகுலுக்கி புன்னகைத்து விட்டு கூட்டத்தில் சென்று மறைந்தார் வில்லியம்.


நேரே நடக்க ஆரம்பித்தேன் கார் பதிந்து வைத்திருந்த இடம் தேடி. "Enterprise Car Rental" என வெளிர் பச்சை ஒளிப்பலகை வரவேற்றது.


மெக்கீ டைசன் - உள் நாட்டு விமான நிலையம் தான். டென்னிசீ மாநிலத்திற்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகளை கவரும் விமான நிலையமும் கூட.
முதலாம் உலகப்போரில் வீர மரணம் அடைந்த 'சார்லஸ் மெக்கீ டைசன்' என்ற விமானியின் நினைவாகத்தான் இந்த பெயராம்.


சுத்தத்திற்கு இலங்கான வெளிர் தரை, நடக்கும் வலிகூட கால்களுக்கு கொடுக்காத நகரும் தரை இதெல்லாம் போதாதென கண்களுக்கு இதமளிக்க ஒரு பச்சை பசும் தோட்டமும் அதன் ஊடே நீரோட்டமும்...இதில் கால் பங்கு நம் சென்னைப்பட்டின விமான நிலையத்திற்கும் வந்துவிட்டால்(!)...


Starbucks காபியின் சுகந்தம் என் மூளையை சீண்டி என்னை நிஜவுலகிற்கு கொனர்ந்தது.


"மிஸ்டர் குமரன், டென்னிசீ மாநிலத்திற்கு உங்களை வரவேற்கிறேன்" என்றது ஆளுயர ஆலிவ் பழம் ஒன்று.
"ஹாய்..." இது நான்.


"டென்னிசீ மாநிலத்திற்கு வருவது இது உங்களுக்கு முதல் முறையா ?" இது அவள்.
டென்னிசீ மாநிலம் வந்தது மட்டுமல்ல, அழகு மயில் ஆங்கிலம் பெசக்கண்டதும் இது தான் முதல் முறை" என்றேன் நான்.
கன்னங்கள் இளஞ்சிவப்பாக மாறி "நன்றி" என்றாள்.
"என் பெயர் ரீடா, இன்று உங்களுக்கு வேண்டிய கார் ஏற்பாடு செய்து தர வேண்டியது என் பொறுப்பு" என்றாள் ரீடா.




                                                                                                             ........மீண்டும் சந்திப்போம்...J

Saturday, January 8, 2011

புதிய சிறகுகள்

ஒரு வருடம் கரைந்தோடிவிட்டது "tamil16.blogspot.com" முளைத்த தருணத்திலிருந்து.

பதினாறு நாடுகள்
முன்னூத்தி இருபது தனிப்பட்ட பார்வையாளர்கள்
மூவாயிரத்து எண்ணூறு முறை பார்க்க/படிக்கப் பட்டிருக்கிறது இந்த வலைத்தளம் என புள்ளிவிவரம் தருகிறது 'Google Analytics'.(மார்ச் 2010 முதல், டிசம்பர் 2010 வரை)

தலை வணங்குகிறேன் தமிழினமே...

இந்த புது வருட தொடக்கத்திலிருந்து "tamil16.blogspot.com"., இனி "tamil16.com" என உருவெடுக்கிறது.

IMG_8147(1)



இணைய முகவரியை "tamil16.com" என உங்கள் உலாவியில் தட்டச்சு செய்வதே நீங்கள் செய்யவேண்டியது.
உங்கள் கணினியின் நினைவில் "tamil16.blogspot.com" என பதிந்திருந்தாலும் கவலை ஒன்றும் வேண்டாம், உங்களை சரியான(tamil16.com) இணைய முகவரியில் கொணர்ந்து சேர்க்க தேவையான ஏற்பாடுகள் செய்து விட்டுருக்கிறேன்.

மற்றுமொரு புதிய சேர்க்கை "www.aperturism.com" இது என் புகைப்பட பயணத்தை மையப்படுத்த உருவெடுத்த வலைத்தளம். நேரமிருந்தால் எட்டிப்பாருங்கள்..

மீண்டும் சந்திப்போம்...J

Thursday, December 23, 2010

மன்மதன் அம்பு

உலக நாயகன் கமலஹாசன், மாதவன், த்ரிஷா ஒன்றிணைந்திருக்கும் 'ரெட் ஜயன்ட் மூவீஸ்'ன் மன்மதன் அம்பு


சினிமா நடிகை நிஷாவாக த்ரிஷா(சினிமா பெயர் நிஷாவாக, நிஜப்பெயர் அம்புஜாக்ஷி யாகவும்), காதல் கைக்கூடி விரைவில் அவரை கைப்பிடிக்க காத்திருக்கும் சந்தேக நாயகன் மதனகோபலாக மாதவன், மதனகோபாலின் சந்தேகத்தின் விளைவில் முளைத்த துப்பறியும் சாம்பு மேஜர் மன்னார் ஆக கமல்.
படத்தின் பெயர்க் காரணம் புரிந்திருக்குமிந்நேரம்.

மதனகோபாலின் சந்தேக குணத்தால் மனமுடைந்து காதல் துறக்கிறார் நிஷா(எ)அம்பு. துறந்த காதலை மறக்க உல்லாசப் படகில் தன் பள்ளி வயது தோழி தீபாவுடன்(சங்கீதா) உலகம் சுற்ற முடிவெடுக்கிறார். காதலை மறக்க முடியாமல் தவிக்கும் மதனகோபால், அம்புவை வேவு பார்க்க செய்யும் ஏற்ப்பாடு தான் மன்னார். புற்று நோயில் தவிக்கும் நண்பனுக்கு உதவி செய்ய சந்தர்ப்பவசத்தால் அம்புவைப் பற்றி பொய் சொல்லி பணம் சேர்க்கிறார் மன்னார்.

இந்நிலையில் அம்புவிடம் மனம் திறக்கிறார் மன்னார். கோர விபத்தில் தன் மனைவியை தொலைத்த நினைவுகளை கட்டவிழ்க்கும் சமயத்தில் அம்புவுக்கு விதியால் தங்கள் கதைகள் குறுக்கிடுவது புரிகிறது, கூடவே ஒரு இனம் புரியாத ஈர்ப்போடு.

மீதப்படம், அம்பு கைப்பிடித்தது யாரை என்பதே!

கமல்... வழக்கம் மாறாத நடிப்பு.
சிரிப்பு, ஈரக்கண்கள், மிடுக்கு, 'ப்ளேபாய்' த்தனம், எளிமை ஓங்கும் அழகு நடனம். பேஷ்..பேஷ்..

மாதவன். படம் முழுக்க வந்து போகிறார்.
ஏனோ மனதில் நிற்காத நடிப்பு.

த்ரிஷா, அழகு. எதார்த்த நடிப்பு.

கதையின் நடுவில் வந்துபோகும் ரமேஷ் அர்விந்த், ஊர்வசி நிறைவான நடிப்பு.

படம் முழுக்க., பாரிஸ், பார்சிலோனா, வெனிஸ் நகரம் என சுழல்கிறது. மனுஷ் நந்தன்-னின் கேமரா கண்களுக்கு ஒரு சபாஷ்.

கடைசி நாற்ப்பது நிமிடங்கள்... திரைக்கதையை வைத்துக்கொண்டு என்ன செய்யவதென்று தெரியாமல் முழித்திருக்கிறார் கே.ஸ்.ரவிக்குமார்.
சுருக்கமாக, சொதப்பலான திரைக்கதை.

படம் முழுக்க ஆங்கில வாசம். ஆங்கிலத்தின் நடுவே தமிழ் வார்த்தைகள் கேட்கப்பெறலாம். ஒரு மிகத் தாழ்மையான வேண்டுகோள் "என் பாமரன் பேசும் மொழியில், பாமரனுக்கு புரியும் மொழியில் பேசி படம் எடுங்களேன்.. தயவு செய்து"

'நீல வானம்' பாடல் மனதில் நிற்கிறது. படமாக்கப்பட்ட விதமும் புதுமை. 'அட' சொல்ல வைக்கும் உழைப்பு, பின்னோக்கி சுழலும் உலகில் புரிகிறது.
கவிதைப் பாடல் முயற்சி 'பலே'.

Monday, December 6, 2010

மலரே ஒரு வார்த்தை பேசு...இப்படிக்கு பூங்காற்று (பயணக் கட்டுரை) -1

'போதும் இந்த கணினிகள் கக்கும் பீப் சப்தமும், கொதிகொதிக்கும் காற்றும், கைபேசிகளின் அதிர்வும்...'
இந்த எண்ணம் என்னுள் இமியளவு துளிர்த்தாலே.., என் மூளை, தான் சொர்வடைந்துவிட்டதை எனக்கு உணர்த்தும் குறுந்தகவலாக புரிந்துகொள்வேன்.

விடுமுறை எடுக்கும் நேரம் வந்தாகிற்று.

இங்கு(அமெரிக்காவில்) குளிர் காலம் ஆரம்பிக்கும் சமயம். இத்துனை நாட்களாக பூக்கள் கொண்டு அழகு சேர்த்த மரங்கள் எல்லாம், இப்போது பழுத்த இலைகளோடு கண்களுக்கு இதமளிக்க ஆரம்பிக்கும் நேரம்.

நான் மலைக்காதலன், நீர்வீழ்ச்சி ரசிகன், ரீங்காரமிடும் வண்டுகளின் சப்தத்தில் உலகத்தை மறப்பவன், ஆள் அரவமற்ற சாலைகளை கண்டு கவலை துறப்பவன், பச்சைப்பசும் புல்வெளிகளில் காலை நேர மூடுபனி கண்டு மெய் சிலிர்ப்பவன், குருவிகளின் பாடல்களில் காணராகம் கேட்டு மகிழ்பவன், தென்றல் முகத்தை வருடும் சுகத்தை ஒப்பிட வேறொரு சுகமொன்றுமில்லை என்ற எண்ணம் கொண்டவன், நொடிக்கொருமுறை வானத்தின் வண்ணத்தை மாற்றும் சூரிய அஸ்தமனத்தின் அழகைக்கண்டு வாய்பிளப்பவன், வாகனப்புகையற்ற காற்றை அடர் காடுகளன்றி வேறெங்கு சுவாசிக்க முடியுமென்று வாதிடுபவன்.

இன்னும் கொஞ்சம் தூரம் தாவினால் நீலவான்வெளியை தொட்டு விடலாம் என்ற எண்ணம் மலைகள் மேலன்றி வேறெப்போது தோன்றும். 
மலை உச்சி.... கீழே பார்த்தால் மயிர்க்கூச்செறியும் ஆழ் பள்ளத்தாக்கின் விளிம்பில் நின்று(தவறி விழுந்துவிடாமல்!) கத்திப்பாருங்கள் 'என்னை வெல்ல யாருமில்லை' என்று., கூட சேர்ந்து சுருதி சேர்க்கும் மலைகளும் 'உங்களை வெல்ல யாருமில்லை' என்று. 
'தன்னை வெல்ல ஆளில்லை இந்த மண்ணுலகில்' என்ற எண்ணத்தோடு நின்றிருக்கும் மலைகளை கீறிக்கொண்டு கொட்டும் நீர்வீழ்ச்சிகளை காணும்போது ஏற்ப்படும் பரவசத்தை வார்த்தைகளில் அடக்குவது கடினம்.

"விடுமுறை" என்றதுமே... என்னை இப்படி ஒரு இடத்திற்கு செல்ல தூண்டியது என் மூளை. இங்கு வந்ததிலிருந்து ஓரிரு முறை கேள்விப்பட்ட இப்படிப்பட்ட இடமொன்று மின்னலாய் தோன்றியது.... 'தி கிரேட் ஸ்மோகீஸ்'(The Great Smokies அல்லது The Great Smoky Mountains, தமிழாக்கம் தடுமாறுவதை உணர்கிறேன் தமிழினமே!)

இணையத்தேடல் தொடங்கினேன்.
மேற்ச்சொன்ன இடத்தின் அழகை குளிர் காலத்தில் பார்ப்பதற்கு கண்கள் இரண்டு போதாதென்றது கூகிள்.
இது போதும்.. தொடங்கினேன் என் பிரயாண ஏற்பாடுகளை.

என் கணினியின் சுட்டிக்கு சுமாராக முப்பது சொடுக்குகளும், எட்டு 'பெஞ்சமின் பிராங்க்ளின்' படம் போட்ட அமெரிக்க ரூபாய் நோட்டுகளும் தேவைப்பட்டது கீழ்க்கண்டவற்றை தயார் செய்ய.,
- சென்று வர விமானப் பயணச்சீட்டு
- மூன்று நாட்கள் காட்டில் தங்கக் குடிலொன்று
- நடக்க முடியா தூரங்களுக்காக கார் ஒன்று

மறுநாள் சாயங்காலம்....
வீட்டிலிருந்து இருபது மைல் தூர கார் பயணத்திற்கு பின், 'சிகாகோ ஒ'ஹேர் விமான நிலையம் உங்களை அன்போடு வரவேற்கிறது.' என்ற எழுத்துப்பலகை, எனக்கு விமானநிலையம் வந்துவிட்டதை உணர்த்தியது.

வெண்ணிற மிளிரல் தரை கொண்டு என்னை உள்வாங்கிக்கொண்டது  ஒ'ஹேர் விமானநிலையம்.
வருடத்திற்கு சுமார் ஆறரை கோடி பயணிகளை கையாளும் அமெரிக்காவின் இரண்டாவது அதிமும்முரமான விமான நிலையம் இது.
இந்த விமான நிலையம் ஒரு நாளைக்கு கொடியசைத்து கட்டுப்படுத்தும் விமானங்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து ஐநூறு(2500).. சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு நூத்திஐந்து(105) விமானங்கள்.
இரண்டாம் உலகப்போரில் வீர மரணமடைந்த "எட்வர்ட் புட்ச் ஒ'ஹேர்" என்ற விமானியின் ஞாபகார்த்தமாக இந்த பெயர். நாற்ப்பதுகளின் தொடக்கத்தில் இரண்டாம் உலகப்போருக்கு தேவையான விமானங்கள் கட்டும் தளமாக இருந்த இடம், இப்போது பிரும்மாண்ட சர்வதேச விமான நிலையமாக உருமாறி நிற்க்கிறது.

'United Airlines' சார்பாக உங்களை உளமார வரவேற்க்கிறேன் என்றாள் முத்துப்பல் சிரிப்போடு, காலின் பெரும்பகுதி தெரிய குட்டைப்பாவாடை(!) அணிந்த  விமானப்பணிப்பெண் ஒருத்தி.
'நன்றி' என்றேன். அதை வழிமொழிந்து, எனக்கு விமானத்தில் இருக்கை எண்ணளித்து மீண்டும் புன்னகைத்தாள். மறுபடியும் நன்றி கூறி விடைபெற்றேன்.

எத்துனை முறை விமான பயணம் செய்தாலும், ஜன்னலோர இருக்கையைத் தவிர யாதொன்றும் அறியேன் நான்.
காரணங்கள்.,
  • ஒருவேளை அடிக்கடி எழுந்து நடக்கும் பழக்கமுள்ள பக்கத்துக்கு சீட்டவர் கிடைத்துவிட்டால், கவலை ஒன்றும் இல்லை.
  • மேகங்களின் கீழே, மேகங்களினூடே, மேகங்களின் மேலே என நம்மை தாங்கி எழும் இரும்புப்பறவை.. இதை பார்த்து ரசிக்கும் சுகம்..அடடா!
  • நம்மை விட பெரியதாய் ஓங்கி நிற்கும் கட்டிடங்கள், சிறுத்து பொம்மை வீடுகலாவது அழகு
  • இரவு நேரத்தில் நேர் கோடுகளாய், அதை ஊடுரும் கோடுகளாய் தெரு/வீட்டு விளக்குகளின் அணிவகுப்பு பிரபஞ்ச நட்சத்திரங்கள் எல்லாம் தரைக்கு வந்துவிட்டதாக தோன்றுமெனக்கு
  • சூர்யோதயமோ, அஸ்தமனமோ....நிறம் மாறும் வானத்தின் அழகை கண்டு குதூகளிக்கலாம்
  • விமானி விமானத்தை கீழிறக்க, வேகம் குறைக்க, நூத்தியெண்பது கோண வட்டமடிக்க அதன் இறக்கைகளுக்கு தரும் கட்டளைகை காணப்பெறலாம்
அடுத்த இருபது நிமிடங்களில் சிகாகோ நகரம் ஒரு சிறு புள்ளியாக மறைந்தது.

'இன்னும் முப்பது நிமிடங்களில் நாம் தரையிரங்கிவிடலாம்... உங்கள் இரவு நல்லிரவாக மலரட்டும்.. நன்றி' என்றார் விமானி.
                                                                                                                                        ......(தொடரும்)

Sunday, September 26, 2010

கார நம்ம வெச்சிருக்கோம்... கார வெச்சிருந்த சொப்பணசுந்தரிய...

சிகாகோவில் என்னவோ இது வெயில் காலம் தான்...
ஆனால் என் வாழ்வில் இது 'கார்' காலம்..

ஆம்.. கார் வாங்கும் எண்ணம் துளிர்த்து, வேறூன்றி, மரமாகி... நாட்கள்..ஏன் மாதங்கள் பல ஆகியிருந்தாலும்..
ஓட்டுனர் உரிமம் இல்லை(இந்த அனுபவம் என் முந்தைய வலைப்பதிவுகளில் கண்டிருக்கலாம்)
"லட்சுமிதேவியின் வரமேதுமில்லை" என்ற என் புலம்பலுக்கு விடை
... அமெரிக்க அரசாங்கத்திடம் வருமான வரி விவர கோப்புகள் சமர்ப்பிக்கும் நேரம்.

நான் முழு நினைவோடு தான் மேற்கண்ட வரியை எழுதினேன். குழப்பமேதும் வேண்டாம்.

நம் நாட்டிலோ,.. வருமான வரி கணக்கீடு புரிய வைக்க ஒரு தரகர், அவர் தரும் படிவத்தில் எந்த நிற பேனாவில் கையெழுத்திட வேண்டுமென்ற குழப்பம், நேரில் சென்று வருமான வரி அலுவலகத்தில் கணக்கை சேர்க்க திண்டிவனம் வரை நீளும் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம்..இவை மட்டும் தான் நினைவிருக்கிறதேனக்கு.

இங்கும் வருமான வரி கணக்கு காட்ட வேண்டிய நேரம். நான் எந்த தரகரையும் அணுக வேண்டிய நிலை இல்லை..
அரசாங்கத்திற்கு சொந்தமான வரி வருமான இணையத்தளத்தில் பதிந்து, பதில் சொல்லவேண்டிய விவரங்கள் இதோ...
  • என் பெயர் மற்றும் விலாச விவரங்கள்(குமரன், 1600 பென்சில்வேனியா அவென்யு, வாசிங்டன். என்று எழுத ஆசை தான்...)
  • நான் இங்கு குடியேறிய மாதம்/கிழமை(விரோதி ஆண்டு, புரட்டாசி மாதம், கார் காலம், வெள்ளிக்கிழமை என்று எழுத சொல்லி உந்தியது என் சிறு மூளை..)
  • எனக்கு படியளக்கும் நிறுவனம்
  • நான் வாங்கும் சம்பளம் எவ்வளவென்று, பணிபுரியும் நிறுவனம் தரும் குறியீட்டு எண்
  • சம்பளத்தில் வரியாக பிடிக்கப்படும் தொகை(எவ்வளவோ..ஆனாலும் அது பெரும் பங்கு.. ஹீ ...ஹீ ..)
  • நான் தனி ஆளா அல்லது குடும்பஸ்தனா..(நான் தனி ஆள் தான் ஆனால் தமிழ் நாடே என் பின்னாடி..), எனக்கு இங்கு மாதாமாதம் ஆஹும் செலவு என இன்னபிற கேள்விகள்.
இவ்வளவே... வரி கணக்கு காட்ட நான் செலுத்திய நேரம், 8 மணி சன் செய்தியின் விளம்பர இடைவேளை அவகாசம்.

நான் இந்த விவரங்களை பதிந்த ஒரு வாரத்தில், வருமானவரித்துறையில் இருந்து ஒரு மின்னஞ்சல். 
"உளமார்ந்த வணக்கங்கள்,
நீங்கள் சமர்ப்பித்த வருமான வரி கணக்குகளை சரி பார்த்தாகிற்று, அமெரிக்க அரசாங்கம் உங்களுக்கு அளிக்கவேண்டிய தொகை '$$$$', இந்த தொகை உங்களை வந்து சேர உங்களின் வங்கிக்கணக்கு இலக்கம் தெரிவிக்க வேண்டுகிறோம்.
இது தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்ணை சுழற்றவும். நன்றி"
(என் கண்களின் கருமணிகள், டாலர் ($) ($) உருவமேடுத்தன..)

என் வங்கி கணக்கு விவரங்களை அளித்து மூன்று மணி நேர அவகாசத்தில்,...
"உன் பணம் பணம்.. என் பணம் பணம்... உன் பணம் என் பணம்..."

"இந்த ஊரு என்ன விலைன்னு கேளு!? 
சரி, இந்த தெருவாவது என்ன விலைன்னு கேளு!?
ஐயோ..இப்போ நான் எதையாவது வாங்கியாகனுமேடா!"

கார் தேடல் தொடங்கினேன்.
"புது கார் வாங்கலாம்..." என்ற எண்ணம் கூட தோன்றவில்லை.

இங்கு வாழும் பெரும்பாலானோர், கார்களை ஒரு குறிப்பிட்ட நாள் வரை மட்டும் ஓட்டிவிட்டு அதை விற்றுவிட்டு வேறு கார் வாங்கிவிடுவது வழக்கம்.
காரணம் கேட்டால்,
  • இந்த காரை விட புது மாடல் வந்தாச்சு
  • நான் எந்த காரையும் ஐம்பது ஆயிரம் மைல்கள் அல்லது ஒரு வருடத்துக்கு மேல் ஓட்டுவது கிடையாது
  • பனி காலம் ஆரம்பிக்கும் முன் இன்னும் பெரிய கார் வாங்க போகிறேன்.. அதான்
  • என் முன்னாள் மனைவியின் கார் இது... புது மனைவிக்கு(!) இந்த கார் பிடிக்கவில்லை
  • எங்கள் வீட்டு நாய் குட்டி போட்டிருக்கிறது, ஆதலால் காரில் நிறைய இடம் வேண்டும்
  • சென்ற வாரம் நான் அலுவலகம் செல்லும் வழியில், ஒரு பட்டாம்பூச்சி பறந்து வந்து மோதி முன்புற கண்ணாடியில் ஒரு கீறல் பட்டுவிட்டது
என இது போல் பல நூறு காரணங்கள் உண்டு.

கார்களை ஏமாற்றி விற்ப்பது இங்கு கஷ்டம்.
கார் வாங்கப்பட்ட தேதியிலிருந்து, இந்த நிமிடம் வரை... கார் எத்துனை முறை பழுது பார்க்கப்பட்டிருக்கிறது, ஏன் பழுது பார்க்கப்பட்டிருக்கிறது, விபத்துகளில் இருந்து மீண்டிருக்கிறதா?, திருட்டு வழக்குகள் ஏதும் பதியப்பட்டுல்லதா போன்ற இன்னபிற விவரங்களை அந்த காரின் 'VIN' எனப்படும் பதினேழு இலக்க அடையாள எண் கொண்டு எந்த 'குப்பனும் சுப்பனும்' கண்டுபிடித்து விடலாம்.

நான் 'Honda' காதலன்.
தேட ஆரம்பித்தது 'Honda' கார்களை மட்டும்.

கார் விற்கும் எண்ணமுடையோர், தங்கள் கார் பற்றிய விவரங்கள் முற்றும் காரின் புகைப்படத்துடன் இணையத்தில் பிரசுரித்தவுடன்., கார் வாங்கும் எண்ணமுடையோர் முந்திக்கொண்டு காரை சென்று பார்த்து, ஆராய்ந்து பணம் கொடுத்து வாங்கிவிடுவது.
இதில், செய்ய வேண்டியவை.,
  • வாங்கப்போகும் காரின் சரித்திரம் தெரிந்து
  • காரை ஒட்டி பார்ப்பது
  • காரை ஏன் விற்கிறார்கள் என்ற காரணம்
  • காரை ஒரு மெக்கானிக் கடையில் கொடுத்து பரிசோதனை
தேட ஆரம்பித்த இரண்டாவது வாரத்தில், சிக்கியது நான் எதிர்பார்த்த மைல்கள் ஓட்டத்தில்/விலையில் ஒரு 'Honda Civic'.

காரின் சரித்திரம் தெரிந்து கொண்டேன், அடையாள எண் கொண்டு.
சொல்லும்படியான பிரச்சினைகள் ஏதுமில்லை.

சுழற்றினேன் 'கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை'.

'ஹலோ..' என்று அமெரிக்க ஆங்கிலத்தில் எதிர்முனையில் கூவியது ஒரு குயில்.
'கார் விற்பனை நிமித்தம் அழைக்கிறேன், உங்கள் கார் இன்னும் விற்பனைக்குள்ளதா ?' என்றேன்.
'ஒ... அந்த கார் என் பாட்டியுடையது. நீங்கள் இன்று நாலு மணிக்கு இந்த விலாசம் வந்தால் காரை பார்க்கலாம்' என்றது அமெரிக்க குயில்.
'சரி.. உங்கள் விலாசம் ஒரு முறை சரி பார்த்துக்கொள்கிறேன்........ நன்றி'

சரியாக மூன்றே முக்காலுக்கு அந்த விலாசம் சென்றடைந்தோம் நானும் என் அமெரிக்க நண்பரும். 
என்னோடு பணிபுரிபவர் இந்த அமெரிக்க நண்பர்.
எந்த காரையும், அதன் சப்தம் கொண்டு அதில் எத்துனை திருகாணிகள் இறுக்கம் குறைந்திருக்கின்றன என்று கூறிவிடுவார்.

நான் மறுபடியும் அந்த தொலைப்பேசி எண்ணை அழைத்து, நீங்கள் கூறிய விலாசத்திற்கு வந்துவிட்டேன்.. காரை பார்க்க நான் தயார் என்றேன்.

ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் வெளியே வந்து.
'வணக்கம் அன்பர்களே...'
நானும்.. 'வணக்கம், இந்த கார் உங்கள் பாட்டியுடையதா ?' என்றேன்.
அவரும், 'இல்லை.. இல்லை.. நீங்க பேசியது என் பேத்திகிட்ட தான், நான் தான் அந்த பாட்டி' என்றார்.
'அட.. அப்படியா.. உங்கள பார்த்தா பாட்டி மாதிரியே தெரியலீங்க' என்றேன்.
அவர் வெட்க்கம் மல்குவது கண்களில் தெரிந்தது.

இதை கவனித்த என் அமெரிக்க நண்பர், என் காதருகே வந்து.,
'அந்த பெண்ணுக்கு உன் வயதில் ஒரு பேரனோ பேத்தியோ இருக்கக்கூடும்.. இதை உனக்கு யூகிக்க முடியலையா?'
'எல்லாம் தெரியும்.. நான் தமிழன்.. உலகம் அழியும் தருணம் வரை கூட பேசிக்கொண்டு தான் இருப்பேன்.. கார் பேரம் முடியும் வரை இதெல்லாம் கண்டுக்காதீங்க' என்றேன்.

அந்த பெண் குறுக்கிட்டு, 
'நீங்கள் பார்க்க வந்த கார் அதோ அங்கு நிற்கிறது.. சாவி காரில் தான் இருக்கிறது.. ஒட்டி பார்க்க வேண்டுமானால், தாராளமாக சென்று பாருங்கள்' என்றார்.

கருப்பு நிற 'Honda Civic'
'அடடா.... கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு...'
கார் ஓட்டம்.. கிட்டதிட்ட மூன்று மைல். 
ஒட்டிய என் நண்பர், பின்னர் காரின் பானட்டில் சிறிது நேரம் ஆராய்ந்துவிட்டு.. 'கார் நல்ல நிலையில் தான் உள்ளது... வாங்கிய பின் செலவேதும் செய்யாமல் ஓட்டலாம்.. அது உறுதி' என்றார்.
நானும் காரை ஒட்டி, 'முடுக்கி, நிறுத்தி, பற்ச்சக்கரம்' இவற்றின் சௌகர்யம் தெரிந்தேன்.

தொடங்கிய இடம் திரும்பினோம், 
'என்ன கார் புடிச்சிருக்கா?' என்றார் அந்த பெண்.
அவரருகே சற்றுமுன் பூத்த குல்மொஹர் பூவொன்று நின்று கொண்டிருந்தது.
'கார் ரொம்ப புடிச்சிருக்கு..' 'இது தான் உங்க பேத்தியா ?' இது நான்.

'ஹாய், நான் தான் உங்களுடன் காலையில் பேசினேன்.. என் பெயர் ஜோவென்' என்று கை குலுக்கினாள்.
சிகப்பிற்கு அடையாளம் சொல்லும் உதடுகள், நீல நிற கண்மணி....
'கை குலுக்கியது போதும்..கையை பிடித்து இத்தோடு இரண்டு நிமிஷம் ஆகிறது' என்று காதை கடித்து, என்னை நிஜ உலகிற்கு கொண்டு வந்தார் என் நண்பர்.
கைகளை விட்டுவிட்டு 'இதெல்லாமா கணக்கு வைத்துக்கொள்வீர்கள்' என்றேன் அவரிடம் வடிவேலு பாணியில்.

'கார் எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு.. விலையை கொஞ்சம் குறைக்க முடிந்தால் ஷேமம்' என்றேன்.

'எவ்வளவுக்கு எதிர்ப்பார்க்கிறீர்கள்' என்றார்.
'நீங்கள் தான் சொந்தக்காரர், நீங்கள் சொல்லுங்கள்' என்றேன்.
'எங்கள் ஊராக இருந்திருந்தால் கை மேல் துண்டை பொட்டு பேரம் பேசி முடித்திருப்போம்' என்று தொடர்ந்தேன்.
'அது என்ன கை மேல் துண்டை பொட்டு பேரம் பேசுவது... எப்படி என்று விளக்குங்கள்' என்றார் பாட்டி(!).
'விளக்க நான் தயார், எங்கள் ஊர் வழக்கப்படி பேரம் பேசுபவருக்கு பேத்தி இருந்தால்., பேத்தியிடம் தான் அப்படி பேரம் பேச வேண்டும்' என்றேன் குறும்பு சிரிப்புடன்.
'You silly' என்று சிரித்தாள் ஜோவென்.

'நீ எதற்கு அடி போடுகிறாய் என்று புரிகிறது, சீக்கிரம் விலையை பேசு...' என்றார் என் நண்பர்.

கடைசியாக நான் கூறிய விலைக்கு ஒத்துக்கொண்ட பாட்டிக்கு நன்றி கூறி, மற்றுமொரு முறை ஜோவென் கைகளை குலுக்கி(ஹீ...ஹீ...), காரை வாங்கி வந்தேன்.

சிறகுகள் முளைத்து விட்டதொரு பரபரப்பு.
என் வீடு நோக்கி முப்பது மைல் தூர பயணம் என் முன்னால்.
மேற்க்கே மறைந்து கொண்டிருந்தது சூரியன்... இரு புறமும் தூரிகை வைத்து தீட்டியதை போன்ற புல்வெளி... இரவு நெருங்குவதை புரிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தன கொக்குகள்.. கொஞ்சம் எதிரே..சாலையோரம்... முகத்தினூடே முடி களைய பெண்னொருத்தி... இந்த முறை..கனவல்ல.

சந்திப்போம்.....N

Saturday, August 28, 2010

மதராசபட்டினம்

காதல்..காதல்..காதல் இல்லையேல் சாதல்...
நம்ம அழகூர் மதராஸ்..
டைடானிக் பாணி காதல் கதை.
சுதந்திர இந்தியா பிறக்கும் சமயம்..
அங்குலம் அங்குலமாக ரசித்து படமாக்கியிருக்கிறார்கள்.

சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடத்தலாம்.,
அட! சொல்ல வைக்கும் அழகு யார்?
ஏமி ஜாக்சன்-ஆ? இல்லை சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்த சென்னைப்பட்டினமா ? என்று.

ஏமி ஜாக்சன், அழகில் பேசுகிறார்.. அழகாக பேசுகிறார்...
கண்களில் அழகு.. உதட்டில் அழகு... சிரிப்பில் அழகு... தமிழ் பேசுவதில் அழகு...
அடடா... அழகோ அழகு...
தமிழ் சினிமா உலகில் வெற்றி வலம் வரப்போவது உறுதி.

ஆர்யா, யதார்த்த நடிப்பு. காதல் வயப்படுவதில், வீரம் கொந்தளிப்பதில்.
சபாஷ் சொல்லவைக்கிறார்.

ஹனீபா, நாசர் படத்திற்க்கு பலம் சேர்க்கிறார்கள்.

இப்படியா இருந்தது நம் சென்னை, என காட்சிகளில் வியக்கவைத்திருக்கிறார்கள்.

"பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே...." பாடல், மனதை மயிலிறகால் வருடுகிறது.

பாராட்ட வேண்டிய முயற்சி.

Monday, August 23, 2010

பதினொன்னு போட்டு காட்டு... (தொடர்ச்சி)

நான் என் முந்தைய வலைப்பதிவுகளில் கூறியிருந்ததைப்போல், இங்கு(அமெரிக்க வாழ்க்கை வாழ..) கார் இல்லா மனிதனுக்கும் கால் இல்லா மனிதனுக்கும் பெரும் வித்யாசமில்லை..

கார் ஓட்டுனர் உரிமம் பெறுவதென்று முடிவு செய்தேன்.
கார் ஓட்டுகிறோமோ இல்லையோ, மொத்தத்தில் இந்த உரிமம் இங்கு அடையாள அட்டை போன்ற ஒன்று.

கார் ஓட்டுனர் உரிமம் நம் பிறந்த தேதி தாங்கி நிற்கும்.

இந்த நாட்டில் சட்டங்கள் அந்த மாதிரி.
அண்மையில் நடந்த சம்பவமொன்று நினைவிற்கு வருகிறதெனக்கு., இங்கு நான் புதிதாக ஒரு வீட்டில் குடியேறிய சமயம், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றிருந்தேன். தேவையான பொருட்களை தேர்வு செய்த பின்னர்., பணம் செலுத்துமிடத்தில் ஜீன்ஸ் பாண்ட் அணிந்த சிகப்பு உதட்டுக்காரி ஒருத்தி "நீங்கள் இந்த கத்தியை வாங்கவேண்டுமானால் நான் உங்கள் அடையாள அட்டையை பார்க்க வேண்டும்" என்றாள்.
அர்த்தம் விளங்காமல் நெற்றி சுருக்கினேன்
அதற்க்கு அவள் "பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கூர்மையான உபகரணங்கள் விற்பதற்கு இந்த மாநிலத்தில் தடை" என்றாள்.
'அடடா... என் பெயர்க் காரணம் எப்படி புரிந்தது இந்த வெள்ளைத்தோல்காரிக்கு' என்ற மனதில் சிரித்துக்கொண்டே..' அப்படி ஏதும் என்னிடம் இல்லை பெண்ணே!" என்றேன்.
"மன்னிக்கவும் அன்பரே, உங்களுக்கு இதை விற்றால் நான் வேலை இழக்கக்கூடும்" இது அவள்.
"கத்தியை தவிர மற்றவைக்கு ரசீது போடுங்கள்" என்றேன் புன்சிரிப்புடன்.

இதைப்போல் பல நூறு சட்டங்கள் உண்டு இங்கு, வயதுக்கேற்ற பண்டம் விற்பனைக்கு.
தலைவலி மாத்திரை வாங்கவேண்டுமானால் கூட, "வயதென்ன?, அதற்க்கு அத்தாட்சி என்ன?" என்ற கேள்விகளுக்கு பின் தான் ஏதும் நடக்கும்.

இணையத்தில் உலாவி, இங்கு ஓட்டுனர் உரிமம் பெற என்ன ஆவணங்கள் தேவை என்று தெரிந்துகொண்டேன். கூடவே எந்த அலுவலகம் செல்ல வேண்டும் மற்றும் எவ்வளவு தூரமென்றும்.

ஓட்டுனர் உரிமம் பெற : நான் வேற்று நாட்டவன் என்பதால்., நம் நாட்டின் கடவுச்சீட்டு, நான் இங்கு வேலை செய்யத் தான் வந்திருக்கிறேன் என்பற்கான அத்தாட்சி(பிறகென்ன அமெரிக்க பழங்குடியினத்தவரின் பாடல்கள் கற்று போகவா வந்தேன்!), என் இருப்பிட விலாசம் மற்றும் இருபது டாலர் அரசாங்க கட்டணம்..... இவையெல்லாம் அத்தியாவசியமாம்.
மேற்க்கண்டவை மட்டுமல்லாமல்., வாகன/சாலை சட்டம் பற்றிய எழுத்துத் தேர்வில் எண்பத்திஐந்து சதவிகிதம் பெற்று தேர்ச்சி, குறைந்தபட்சம் ஐந்து மைல் தூரம் சாலை விதிகளை மதித்து கார் ஒட்டி காட்ட வேண்டும் ஒரு அரசாங்க அதிகாரியிடம்(நம் ஊர் R.T.O போல்)

என் அமெரிக்க நண்பர்கள் பெரும்பாலானோர்., "அரசாங்க அலுவலகத்திற்க்குச் செல்கிறாய், எட்டு மணிக்கு அலுவலகம் ஆரம்பிக்கும் சமயம் அங்கு இருப்பது உசிதம்" என்று பயமூட்டினர்.

'அடடா.. என்ன கொடுமை சார் இது'

நான் செல்ல முடிவு செய்த நாள், சனிக்கிழமை.
சனி நீராடிவிட்டு காலை ஏழு மணிக்கெல்லாம் ஓட்டுனர் உரிமம் வழங்கும் அலுவலகம் சென்று சேர்ந்தேன். எனக்கு முன்னரே இருபது பேர் அந்த அலுவலகம் முன், அழகான நேர் வரிசையில் காத்திருந்தனர்.

மணி 7.45 : அலுவலகத்தினுள் இருந்து நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் வெளியே வந்து "எல்லோருக்கும் எங்கள் இனிய காலை வணக்கங்கள்! உங்களை இந்த அலுவலகத்திற்கு அன்போடு வரவேற்கிறோம். இன்னும் பதினைந்து நிமிடங்களில் இந்த அலுவலகம் திறக்கப்படும். ஓட்டுனர் உரிமம் பெற வந்துள்லோர் இந்த கதவின் வலது புறமும், மற்ற அரசாங்க காரியங்களுக்கு வந்திருப்போர் கதவுன் இடது புறமும் நிற்கவும்.(சித்தெறும்புகளைப்போல் சட்டென நகர்ந்து அவள் சொன்னதை செய்தனர் அனைவரும்..நானும் தான்.. அலையில் சிக்கிய இலையைப்போல்)
மேலும் அலுவலகத்தினுள் உணவுப் பண்டங்களுக்கு அனுமதி இல்லை.
இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்" என்று சொன்னதோடு புன்னகையும் சிந்திவிட்டு, கேள்விகளோடு காத்திருப்போருக்கு பதில் கூறிக்கொண்டிருந்தாள்.

வரிசையில் நிற்கும் மக்கள் மத்தியில் எந்த சண்டையும் இல்லை..யார் முதலில் நகர்ந்து செல்ல வேண்டுமென்ற குழப்பம் ஏதும் இல்லாமல் நகர்ந்தனர்.

மணி 8.00 : அலுவலகம் திறக்கப்படுகிறது.
அலுவலகத்தினுள் நுழைந்ததும், குளிர்காற்று என் முகத்தை அணைத்து வரவேற்றது. தாஜ் கோரமென்டலினுள் நுழைந்ததாக நினைத்துக்கொண்டிருந்த என் மூளையை சரிசெய்துகொள்ள., என் நாக்கை ஒரு முறை நானே கடித்து இது கனவல்ல என்றும் உறுதி செய்தேன்.

மணி 8.05 : என் வரிசையில் நான் ஆறாவதாக...என் முறை வந்ததும் என் ஆவணங்கள் சரிபார்க்கப்படுகின்றன. "குமரன், தங்களது ஆவணங்கள் சரி பார்தாகிற்று, நீங்கள் செல்லவேண்டிய செயலறை எண் ஆறு" என்றது சிகப்பு உடையில் இருந்த பைங்கிளி(!) ஒன்று.

மணி 8.15 : இடம் : செயலறை எண் ஆறு., "காலை வணக்கம், தாங்கள் இங்கு வந்த நோக்கம்?" என்றார் ஒரு அரசாங்க அதிகாரி. மூலிகை பெட்ரோல் தயாரித்து அமெரிக்கா முழுதும் விற்பனை செய்ய, உரிமம் பெற வந்தேன் என்று சொல்ல எண்ணி "ஓட்டுனர் உரிமம்" என்றேன் புன்னகையுடன். நான் கொண்டு சென்றிருந்த ஆவணங்களை பெற்றுக்கொண்டு, இன்னபிற ஆவணங்களில் என்னிடம் மூன்று முறை கையெழுத்து பெற்றார்.
கவுண்டமணி பாணியில்., 'சார், எங்க ஊர் முக்கியமான பேப்பர்ஸ் ஏதும் உள்ளே வெக்கலயே..' என்று மனதில் எண்ணம்.

"மிஸ்டர் குமரன், உங்கள் வலது பேரு விரல் ரேகை வேண்டும், தயவுசெய்து அந்த ஒளிப்பலகையில் உங்கள் வலது கை பெருவிரலைப் பதியுங்கள்" என்றார்.
மயிலிறகின் ஸ்ப்ரிசம் போதும் அந்த இயந்திரத்திற்கு, என் பேரு விரலை பதித்தவுடன் அதை உள் வாங்கிக்கொண்டு 'பீப்' சப்தமிட்டது.

"மிஸ்டர் குமரன்., நீங்கள் அணிந்திருக்கும் மூக்குக் கண்ணாடி, உங்களின் பார்வை திருத்தத்திற்க்கா(?) அல்லது உங்களின் முக பாவனைக்காகவா ?" என்றார் அவர்.
'முக பாவனை மாற்ற நான் என்ன தசாவதாரம் கமலஹாசனா ?' சிரிப்புடன் "பார்வை திருத்தம் தான் காரணம்" என்றேன்
"உங்கள் இரு கண்களாலும் உங்களின் வலது கைப்பக்கமுள்ள அந்த கருப்பு பெட்டகதினுள் பாருங்கள்" என்றார்... அந்த பெட்டகதினுள் இருந்த திரையில் தெரிந்த பறக்கும் பலூனை பார்த்த மாத்திரத்தில் 'பீப்..பீப்..' என்றது என்றது அந்த இயந்திரம். அந்த இயந்திரம் கூறிய என் கண்பார்வை குறியீடுகளை குறித்துக்கொண்டதுடன்,

"நீங்கள் அடுத்து நேரே சென்று காசாளரிடம் உங்கள் கட்டணத்தை கட்டிவிடுங்கள்" என்றார்.

மணி 8.28 : இடம் : காசாளர் கூடம்., இருபது டாலர் நோட்டை(மட்டுமே!) அவரிடம் நீட்டியதுமே, இயந்திரம் கக்கிய ரசீதை என்னிடம் நீட்டினார்.

மணி 8.31 : இடம் : பரீட்சைக் கூடம்.,
'என்ன பெரிய பரீட்சை., SSLC, ப்ளஸ் 2 என வாழ்க்கை தடத்தையே மாற்றும் பரீட்சைகள் எழுதியாகிற்று.. இன்னுமென்ன பயம்' என்ற எண்ணம் ஆழ் மனதில் இருந்தாலும், அபார நம்பிக்கையின் விளைவால் ஏதும் சொதப்பல் நடந்துவிடுமோ என்ற பயமும் தான்.
சாலையின் குறியீடுகள், வாகனத்தை கையாளும் விதம், பாதுகாப்பு சட்டங்கள் என ஒரு வாகன ஓட்டுனருக்கு இருக்கவேண்டிய இயல்பறிவை சோதிக்கும் பரீட்சை.

மணி 8.35 : இடம் : பரீட்சைப் பேப்பர் திருத்துமிடம்.,
எழுதி முடித்த பரீட்சைத் தாளை மற்றுமொரு அரசாங்க அதிகாரி வாங்கிச் சென்றார். பதில்களை என் எதிரிலேயே(!) சரி பார்க்க ஆரம்பித்தார்.
'ஒரு வேலை நம்மிடம் சம்திங் ஏதிர்பார்ப்பாரோ..'  தமிழனின் மூளை(!).
 குறும் புன்னகையுடன் "நீங்கள் தேர்ச்சி பெற்றுவிட்டீர்கள்... நேரே சென்று நீங்கள் ஒட்டி காட்டப்போகும் காருடன், அலுவலகத்தின் பின்புறம் வந்துவிடுங்கள். மற்றுமொரு அரசாங்க அதிகாரி அங்கு உங்களை சந்திப்பார்" என்றார்...
'ஆத்தா....நான் பாஸ் ஆகிட்டேன்' 


மணி 8.40 : இடம் : அலுவலகத்தின் பின்புறம்.
நான் வாடகைக்கு கொண்டு சென்றிருந்த காரில் காத்திருக்க., உதடுகளில் 'Elle 18' தாங்கி வந்த பாவையொருத்தி காரில் இருத்த ஒளி/ஒலி-ப்பான்களை சரி பார்க்கும் மும்முரத்தில்.


மணி 8.43 : இடம் : வாடகை காரின் ஓட்டுனர் இருக்கையில்.
காற்றோடு மிதந்து வந்து காரில் ஏறிக்கொண்டாள் நடுத்தர வயது பெண்னொருத்தி. "குமரன், என் பெயர் Jackie. உங்கள் வாகன ஓட்டும் திறமையை பரிசோதிக்க போகிறேன் நான். நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொன்னால் போதும்"
'பேசியே ராஜ்யத்தை வெல்லும் தமிழ்க் குடியில் பிறந்தவன் நான், அது முடியாதம்மா என்னால்'


மணி 8.45 : இடம் : போக்குவரத்து அம்மும் சாலை
வலது பக்கம் திரும்பு, இடது பக்கம் திரும்பு, பின்னோக்கி செல், குறிப்பிட வேகத்தில் செல், சாலையோரம் வாகனத்தை இறுதி, பள்ளி வளாகம் நெருங்கினால் என்ன வேகத்தில் செல்ல வேண்டும்....என்று சுமார் எட்டு மைல் தூரம் எனக்கு கட்டளைகள் இட்டு வந்தாள். 
நான் - பொம்மலாட்ட பொம்மையை என்று சொன்னாலும் மிகையாகாது.
நான் செய்கிற தவறு/சரி எல்லாவற்றையும் குறித்துக்கொண்டும் வந்தாள்.
'சம்திங் பற்றி பேச இது தான் சரியான சமயம் என்றது என் சாத்தான் மூளை'
'வேண்டாம் பொறு' என்றது சுயசிந்தனை.


மணி 9.15  : இடம் : அலுவலகத்தின் பின்புறம்(ஓட்டும் பரீட்சை ஆரம்பித்த இடம்!)
தான் வைத்திருந்த படிவத்தில் கையெழுத்திட்டு, என்னிடம் திரும்பி "நீங்கள் தேர்ச்சி பெற்றுவிட்டீர்கள்" என்றாள்.
வெற்றி....வெற்றி... வெற்றி வேல்... வீர வேல்..


மணி 9.20  : இடம் : ஓட்டுனர் உரிமதிற்க்கு புகைப்படமெடுக்குமிடம்.
"கொஞ்சம் சிரியுங்களேன்" என்று சிணுங்கியது ஜீன்ஸ் அணிந்த பைங்கிளி ஒன்று.
"புகைப்படம் முடிந்தாகிற்று, உங்கள் முன்னாலுள்ள ஓளிப்பேழையில் கையெழுத்திடுங்கள்" என்று மீண்டும் சிணுங்கல்.
மணலில் எழுதிய விரல்களுக்கு.. ஓளிப்பேழையின் வழவழப்பு பிடிபடவில்லை...

"கையெழுத்து சரியாக வந்ததாக தோன்றவில்லை பெண்ணே..
என்னை மீண்டும் கையெழுத்திட அனுமதித்தால்..
உன் உதட்டழகை வர்ணித்து கவிதை எழுதி சலவைக்கல்லில் பதித்து, அதை நிலவில் கொண்டு சேர்க்கிறேன்.."


சிரிப்பைச் சிந்திவிட்டு "சரி..." என்றாள்.


மணி 9.25  :  "மிஸ்டர் குமரன், உங்கள் ஓட்டுனர் உரிமம் தயார். உங்கள் பயணங்கள் இனிதாக அமையட்டும்".
"நன்றி" இது நான்.

சுயஅறிவு/வாகன கையாளும் முறை தேர்வு..
கண் பரிசோதனை..
வார்த்தைக்கு வார்த்தைக்கு மரியாதையுடன் பேசும் அலுவலர்கள்..
அதட்ட யாருமில்லாவிட்டாலும் மக்களிடையே இருந்த ஒழுங்கு முறை..
சற்று முன் சலவை செய்து எடுத்ததைப்போன்ற அலுவலகம்..
தேவையான ஆவணங்கள்..
இடைத்தரகர்கள் இல்லாத இரண்டரை மணி நேரம்.
அரசாங்க கட்டணம் மட்டும்..
...இவை மட்டுமே நினைவில்.

என்று வரும் நம் நாட்டில் இந்த நிலை ??

சந்திப்போம்.....N

Friday, August 13, 2010

இதயம்

காதலிப்பது
யாராக
இருந்தாலும் !!
கஷ்டபடுவது
நான்
மட்டுமே !!

இப்படிக்கு
இதயம் :-)

நிமிடம்

எனக்கு
மட்டுமே
சொந்தம்
என்று
எதையும்
நான்
நினைத்தது
இல்லை இன்றுவரை..
உன் அன்பு
கிடைத்த
அந்த
நிமிடம்
வரை..

சுமை

விழிகளும்
சுமை தான்..
உன்னை பார்க்காமல்
ஏங்கும் நாட்களிலெல்லாம்..

புரிதல்

உன்னை
பார்க்க
அடம்பிடிக்கும்
என்
கண்களுக்கு
எப்படி
புரிய வெய்பேன்
நீ
என்
இதயத்தில்
இருக்கிறாய்
என்று..

Saturday, July 31, 2010

உன் நினைவுகள்

துடிக்க
மட்டுமே
தெரிந்த
என்
இதயத்துக்கு
தவிக்கவும்
கற்று
கொடுத்தது
உன்
நினைவுகள்..

Wednesday, July 28, 2010

ரணம் சுகம்

"காதல் சொல்லு..
கிட்ட வந்து காதுல சொல்லு...
கண்ணுல சொல்லு...
கவிதையா பேச்சுல சொல்லு...."

"ரணம் சுகம்" பாடல்கள் தான் இந்த வாரம் முழுதும் என் காலை நேர காபியில் இனிப்பை கலந்துகொண்டிருக்கிறது.

ரம்மியமான இசை, மனதைவருடும் பாடல் வரிகள்.. உண்மையில் பாராட்ட வெண்டிய முயற்சி.

கதை நாவல்., அதோடு இணைந்து ஒன்பது பாடல்கள்.
ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால்.... பிரமாதம்


கீழிருக்கும் இணைய முகவரி கொண்டு பாடல்கள் வாங்கலாம்.
http://www.ranamsugam.com/index.php

பாடல்கள் கேட்க ஏதுவாக்கிய நட்பு வட்டாரதிற்கு சிறப்பு நன்றி.
சந்திப்போம்.....N

Sunday, July 25, 2010

நீ...

உயிருடன் ஒப்பிட
முடியவில்லை
உன்னை..
ஏன் என்றால்
உயிரும்
ஒரு நாள்
பிரிந்துவிடும்
என்பதால்!

Friday, June 25, 2010

பதினொன்னு போட்டு காட்டு...

அழுதுவடியும் அழுக்குப்படிந்த பழைய கட்டிடம்.. அல்லது சற்றுமுன் கலெக்டர்/மந்திரியால் திறந்து வைக்கப்பட்ட புத்தம் புதிய, ஆனாலும் விரைவில் அழுக்குப்படியப்போகும் வெள்ளை வெளேர் கட்டிடம்.

எவ்வளவு புதிதாக இருப்பினும்., அந்த கட்டிடங்களின் பெரும்பாலான தூண்கள் ஏற்கனவே சிகப்பு பாவாடை கட்டி இருப்பதை காணலாம். உபயம் : போது இடங்களில் வெற்றிலை மென்று துப்புவோர் சங்கம்.

கட்டிடத்தின் சுவரிலோ அல்லது அதை சுற்றி அமைந்துள்ள மதில் சுவரிலோ(!) 'நோட்டீஸ் ஒட்டாதீர்கள்' என்ற எச்சரிக்கையின் மேல் தேர்தல் பிரச்சார விளம்பரமோ, சினிமா விளம்பரங்களோ குடிகொண்டிருக்கும்.

கட்டிடத்தின் தென்மூலை, வடமூலை, சனிமூலை, ஈசான்யமூலை என எந்த மூலையையும் விடாமல், மூங்கில் தடுப்புகள் கட்டி அதை வாகனங்கள் நிறுத்துமிடமாக்கி பணம் வசூலிக்கும் கூட்டம்.

தட்டச்சு இயந்திரம்/மடிக்கணிணி சகிதமாக கட்டிடத்தின் முன் இருபுறமும் அமர்ந்து தன் வேலைகளை கவனித்தும், மீதமுள்ள புலன்களால் நம்மை ஊடு கதிர்படமேடுக்கும் 'உடனடி தரகர்கள்' கூட்டம். இவர்களன்றி அரசாங்க அலுவலகத்தினுள் ஓரணுவையும் அசைக்க எந்த ஒரு இந்திய குடியுரிமை பெற்ற சாமானியனாலும் முடியாதென்பது இவர்களது எண்ணம்...இது உண்மை இல்லை என்று மறுக்க நாமில் பெரும்பாலானோர்க்கு முடியாது.

கட்டிடத்தினுள் நுழைந்ததுமே நாம் என்ன காரியத்திற்காக வந்திருக்கிறோம் என்பதையும் நம்மிடம் எவ்வளவு பணம் அன்பளிப்பாக(!!) வாங்கலாம் என்று நம் முகம்/நடை/உடை பாவனைகளை வைத்து ஆரூடகம் செய்யும் 'அரசாங்க அலுவலர்' கூட்டம்.

கத்தை கத்தையாக கோப்புகள், ஏற்கனவே தன் பாதியை மூட்டைபூச்சிகள் விழுங்கிவிட்டதை உணர்ந்திருக்கும் மேசை நாற்காலிகள், மழைக்கால விளைவாக கண்ணீர் விட்டும் விரிசல் கண்டும் நிற்கும் சுவர்கள், ராஜராஜ சோழன் காலத்திலிருந்து இந்த அலுவலகங்களில் தங்கள் குடும்பத்தை விருத்தி செய்து கொண்டிருக்கும் சிலந்திகள்.... இவையெல்லாம் அரசாங்க அலுவலகத்தின் அடையாளமாக கண்டு வளர்ந்தவன் நான்.

கண்டிப்பாக., பெருமாள், செந்தில், மணிகண்டன் என பெயர்கள் கொண்ட அரசாங்க அலுவலர்களில் ஒருவரேனும்.. அடுத்தமுறை கவனித்துப்பாருங்கள் மேஜை மேலுள்ள பெயர் பலகைகளை...
ராமன் ஆண்டாலென்ன, ராவணன் ஆண்டாலென்ன... என ஒவ்வொரு மேசைக்கும் டீ, காப்பி விநியோகிக்கும் டீ கடை சிறுவர்கள்..
நேற்றைய 'தங்கம்', 'தென்றல்' மெகா சீரியல் விமர்சனங்கள் காதுக்கு எட்டும் தூரத்திலிருக்கும் பெண் அலுவலர்களிடமிருந்து.

ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் அலுவலக வேலைக்கு., பதினோரு மணிக்கு வந்ததையே லிம்கா சாதனைகளில் பதியவேண்டிய நிகழ்வாக நினைத்து பேசும் கூட்டம் ஒரு பக்கம், நாசாவில் தலைமை விண்வெளி ஆராய்ச்சியாளராக இருந்து, பால்வெளி நட்சத்திரங்களை சுற்றி இனம் புரியாமல் தோன்றும் கருப்பு வட்டங்களை பற்றிய ஆராய்ச்சியை தமிழக அரசாங்க வேலை நிமித்தம் கைவிட்டுவிட்டு வந்துவிட்ட ஒரு தோரணையோடு உலா வந்து கொண்டிருக்கும் அலுவலர்கள் ஏராளம்.

எல்லாமிருக்கட்டும், நாம் அந்த அலுவலகத்திற்க்கு வந்த வேலை என்ன என்பதை மட்டும் சுருங்கசொல்லிவிட்டால் போதும்.. அது அப்துல் கலாம் - முன்னாள் இந்திய ஜனாதிபதி என்ற பெயரில் ஓட்டுனர் உரிமம் வேண்டுமானாலும் சரி(!)., அதற்க்கு யாருக்கு எவ்வளவு அன்பளிப்பு(!) கொடுக்க வேண்டும் என்ற பட்டியலுடன் தயாராக இருப்பர் சித்திரகுப்தனாக அங்கிருக்கும் ப்யூன்கள்.

இந்த அனுபவங்கள் நம்மில் பலருக்கு குறைந்தபட்சம் ஒரு முறையாவது நடந்திருக்கும்.

கடவுச்சீட்டு, ஓட்டுனர் உரிமம் என்பதில் ஆரம்பித்து மின் கட்டணம் கட்டுவது வரை பொதுவாக எல்லாவற்றுக்கும் இதே நிலை தான் நம் நாட்டில்.
உதாரணதிற்க்கு, ஓட்டுனர் உரிமம் பெற அரசாங்கத்திற்க்கு செலுத்தவேண்டிய கட்டணம் எவ்வளவு கேட்டால் நம்மில் பெரும்பாலனோர்க்கு கண்டிப்பாக தெரியாது... காரணம்..
இது தன்னிலை விளக்கம் கொண்ட வாக்கியம். காரண விளக்கம் தேவையிறாது என்று நினைக்கிறேன்(!).

"கட்டணம் மட்டும் தான் செலுத்துவேன்... அன்பளிப்பு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனக்கு..." என்று அரசு அதிகாரிகளிடம் வீம்பு பேசினால், கண்டிப்பாக எட்டு போடுவதற்கு பதிலாக பதினொன்று பொட்டு காட்டிவிட்டு தான் ஓட்டுனர் உரிமம் வாங்க முடியும் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை.

இதைப் போன்ற அனுபவங்களில் வாழ்ந்து பழகிய எனக்கு, வரப்போகும் அனுபவ அலைகள் சற்றே பரவசமூட்டுபவை என்று சொன்னாலும் அது மிகையாகாது........

அனுபவ அலைகளோடு மீண்டும் சந்திக்கிறேன்.....N

Friday, June 11, 2010

சிங்கம் - மசாலா கர்ஜனை

பிக் பிக்சர்ஸ் - ஸ்டுடியோ கிரீன் இணைந்து K. E. ஞானவேல் ராஜா தயாரிக்க.,
'ஆறு' வெற்றிக்கு பின் மீண்டும் ஒன்றிணைந்திருக்கும் சூர்யா - ஹரி கூட்டணியில்,
சன் பிக்சர்ஸ் வெளியீட்டில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது - சிங்கம்

நாலு வரிக் கதையோ, நாற்பது வரிக் கதையோ...
இது வரை தமிழ் சினிமா பார்த்திராத கதையோ, பார்த்து சலித்துவிட்ட கதையோ..
மொத்தத்தில் வேண்டியது, எல்லா தர பார்வையாளர்களையும் இருக்கையில் இருத்த தேவையான அம்சங்கள். இந்த அம்சங்களில், பெரும்பாலானவற்றை தன்னுள் வாங்கி ரசிகர்களிடையே கம்பீர நடையோடு - சிங்கம்


தூத்துக்குடி மாவட்டம் நல்லூர் கிராமத்தில் சுழல ஆரம்பிக்கிறது கதை. தந்தை சொல் கேட்டு காவல்துறையில் தன் சொந்த ஊரிலேயே சப்-இன்ஸ்பெக்டர் ஆகிறார் துரைசிங்கம்(சூர்யா)(படத்தின் பெயர்க் காரணத்தை இவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பதை சற்றும் தவிர்க்க இயலவில்லை). பஞ்சாயத்து, சோம்பு, ஆலமரம் இவையேதுமில்லாமல் FIR, கோர்ட், கேஸ் என்றில்லாமல் ஊர் பிரச்சினைகளை தீர்த்தும் வைக்கிறார்.
விடுமுறைக்கு நல்லூரில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு வரும் காவ்யா(அனுஷ்கா)வை சந்தித்து காதல் வயப்படுகிறார் துரைசிங்கம்.
பிரபல சென்னை கட்டப்பஞ்சாயத்து தாதா மயில்வாகனம்(பிரகாஷ் ராஜ்), கோர்ட் உத்தரவின் பேரில் நல்லூர் வரநேர்ந்து, துரைசிங்கத்திடம் மோதல் காண்கிறார்.
மோதலில் மண்ணை கவ்வும் மயில் வாகனம், துறைசிங்கத்தை பழிவாங்க தன் செல்வாக்கை கொண்டு அவரை சென்னைக்கு இடம் மாற்றுகிறார். சென்னை வரும் துரைசிங்கம் எப்படி மயில் வாகனத்தை ஒடுக்கி வெற்றி காண்கிறார் என்பதை கொஞ்சமும் சலிக்காமல் நேர்த்தியான காட்சிகளை கொண்டு நகர்த்திச் சென்றிருக்கிறார்கள்.

நல்லூர் கிராமமாகட்டும், கூட்டம் நிறைந்த சென்னையாகட்டும்., கதையை எவ்விதத்திலும் தவற விட்டு விடாமல் தேவையான அளவு மசாலா கலவையோடு படம் தந்திருக்கிறார் ஹரி. கதையோடான நகைச்சுவை காட்சிகள், சல்லிப்பு உண்டாக்காத சண்டைக் காட்சிகள் படத்திற்கு பலம்.

சூர்யா, கலகமற்ற நடிப்பு.
முகத்தின் பெரும்பாலான இடங்களில் மீசையோடு, படம் முழுக்க மிரட்டியிருக்கிறார். வசனங்கள், சண்டை காட்சிகள், காதல் வயப்படும் காட்சிகளென நடிப்பில் தெளிவு.

அனுஷ்கா., அழகு.
தமிழ் ரசிகர்களூடே இது அனுஷ்கா காலம் போலும்.
சூர்யாவின் மிரட்டலான நடிப்பை, தன் உதடு சுழிப்புகளில் கவர்ந்துவிட்டிருக்கிறார்.
பாடல் காட்சிகளில் மட்டும் வந்து போகாமல், கொஞ்சம் நடித்தும் இருக்கிறார்.

விவேக்...கலைவாணர் ஸ்டைல் காமெடியை விட்டுவிட்டு 'ஏட்டு ஏரிமலை'யாக கலக்கியிருக்கிறார். பெரும்பாலானவை(வழக்கம்போல!!) இரட்டை அர்த்த வசனங்களாக இருப்பினும், கண்டிப்பாக நம்மை சிரிக்க வைக்கிறது.

பிரகாஷ் ராஜ், வில்லன்னுகேற்ற நடிப்பு..வழக்கம் போல.
நடிப்பில் மின்னுகிறார்.

ராதா ரவி, நிழல்கள் ரவி, மனோரமா, நாசர், போஸ் வெங்கட் என பெரும் நட்சத்திர கூட்டம். எல்லோரும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

நம்மை நாற்காலியோடு இரண்டரை மணி நேரம் கட்டிபோடிருக்கும் திரைக்கதைக்கு ஒரு சபாஷ்!
திரைக்கதையின் வேகத்தில் V.T.விஜயனின் கத்தரிக்கோலுக்கு முக்கிய பங்குண்டு.

தமிழ் படங்களுக்கே உரித்தான., ஒரே பாடலில் சாதிக்கும் ஹீரோ, பார்த்தவுடன் காதல் வயப்பட ஹீரோயின், Assistant Commissioner-யும் எதிர்த்து பேசி ஸ்டேஷனை விட்டு வெளியேற்றும் இன்ஸ்பெக்டர் ஹீரோ, ஆயிரம் பேர் எதிர்த்து வந்தாலும் நிராயுதபாணியாக நின்று எல்லோரையும் பந்தாடும் ஹீரோ என படம் நெடுக மசாலா வாசம்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ஐந்து பாடல்கள்.
பாடல்கள் ஏதும் மனதில் நிற்காவிட்டாலும், அனுஷ்காவின் ஆட்டத்தால் கண்களில்  நிற்கிறது.

நாலு வரிக்கதைக்கு அதிவேக திரைக்கதையோடு இன்னபிற மசாலா அம்சங்களையும் சேர்த்து வெற்றிப்படம் தருவதேப்படி என்பதற்கு சிங்கம் நல்ல உதாரணம்

சந்திப்போம்....N

Monday, June 7, 2010

வீழ்வது நானாக இருப்பினும்.. வாழ்வது தமிழாக இருக்கட்டும்....

செம்மொழியான தமிழ் மொழியாம்.
இதோ நம் ரஹ்மானின் இசையில் தமிழ் மாநாட்டிற்க்கான தமிழ் வாழ்த்துப் பாடல்.
இரண்டரை மாத உழைப்பு.. எழுபது பாடகர்கள்... என பின்னியிருக்கிறார்கள்.

ஹாலிவுட்டில் சுறுசுறுப்பாக இசைத்துக்கொண்டிருந்த ரஹ்மானை கொண்டுவந்து இந்த பாடலுக்கு சுருதி சேர்க்கச் செய்திருக்கிறார்கள்.

"பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும்.." என T.M. சௌந்தரராஜன் ஆரம்பிக்க, யுவன், ஸ்ருதிஹாசன், P.சுஷீலா, ஹரிணி, ஹரிஹரன், ஸ்ரீநிவாஸ், விஜய் ஜேசுதாஸ், பென்னி தயல் என நீளுகிறது இந்த இசைஞர் குழுமம்.

கலைஞரின் பாடல் வரிகள், கௌதம் மேனன் இயக்கம், மூன்று வெவ்வேறு தலைமுறை பாடகர்கள் என மெய் சிலிர்க்கவைக்கும் அம்சங்கள் பல..

பாடலுக்கு மேலும் மெருகேற்ற., குமரியில் தொடங்கி, ராமேஸ்வரம் கடற்கரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், வேளாங்கண்ணி....மகாபலிபுரம், டைடல் பார்க் என பல 'அட' சொல்ல வைக்கும் கோணங்களில் கேமரா கொண்டு வர்ணம் தீட்டி இருக்கிறார்கள்.

கர்நாடக சங்கீதம் - அருணா சாய்ராம், பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ மற்றும் சௌம்யா..
கிராமிய இசை - M.Y.அப்துல் கனி, காஜாமொய்தீன், S.சாபுமொய்தீன்
ராப் - ப்லேஸ்
என இசைக் காவியம் படைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறை இந்த பாடலை கேட்க்கும் போதும், என் மனதில் பட்டாம்பூச்சிகளின் படையெடுப்பு...

இதோ உங்கள் பார்வைக்கு..


Friday, June 4, 2010

தனிமை

நீ
என்னுடன் இருக்கும்போது
பேசுவதை விட
நீ
இல்லாத என் தனிமையில்
உன்னுடன் பேசுவதே அதிகம்..!

Wednesday, June 2, 2010

என் மனதில்

சில நேரம் நினைவில்..
சில நேரம் அருகில்..
சில நேரம் தொலைவில்..
அனால்
நீ
என்றும்
என் மனதில்..