Tuesday, January 5, 2010

மீண்டும் !!!

அன்று ஒரு அழகிய விடியல்.
சூரியன் தன் ஒளி கைகளை பூமியின் மீது ஏற்கனவே பரவ ஆரம்பித்து விட்ட நேரம்..
நீண்ட நெடும் சாலை... முடிவறியா சாலை.

தார் சாலை தான் என்றாலும் மேடு பள்ளங்கள் இல்லாத பெண்ணின் நேர் நேத்தி போல் நீண்ட நெடும் சாலை.

சோம்பல் தெளியாத மேகங்கள் சூரியன் தடத்தை மறைக்க, ஒளிக்கற்றைகள் ஒற்றை வீச்சுகளாக பூமியை வந்தடைய முயற்சி செய்து கொண்டிருந்தன.

இரு புறமும், தூரிகையெடுத்து பச்சை வர்ணம் தீட்டியது போல் பசும் புல்வெளி.
விடியல் வந்துவிட்டதை உணர்ந்து, கிளம்பிவிட்டன காலை நேர பறவைகள் எல்லாம்.
யாவரும் பயணிக்காத சாலையில் நான் மட்டும்.
அதுவும் BMW - HYBRID காரில், இவை அனைத்தையும் ரசித்தவண்ணம்.
சட்டென்று நிமிர்ந்த நான், சாலை ஓரத்தில் காண்பதென்ன என்று நினைக்கும்
வேளையில்... என் BMW...  க்க்க்க்ர்ர்ர்ரர்ர்ர்ர்ச்சச்ச்... சப்தத்தோடு நின்றுவிட்டது.

நின்றுகொண்டிருப்பது., சற்றே உதிர்ந்த விண் நட்சத்திரத்தை கண்களிலும், உதடுகளில் ரோஜா இதழ்களையும் தாங்கி நிற்கும் ஒரு அழகுப்பதுமை.

அவள் கண்களில் இருந்து மீள்வதற்குள்.... அவளே கூறினாள், அருகில் இருக்கும் கல்லூரிக்கு செல்ல உதவி வேண்டும் என்று.. அதுவும் மிக மெல்லிய நுனி நாக்கு ஆங்கிலத்தில்.
மறுவார்த்தை இன்றி, அவளையும் அமர்த்தியதும், கிளம்பியது என் BMW.

பாரதியின் பாடல்...."காணி நிலம் வேண்டும்.." நினைவு என் ஆழ் மனதில்..!!!

எண்ணங்களால் கிளர்ச்சி அடைத்து கொண்டிருந்தது என் மனம்.
பெயரில் ஆரம்பிக்கலாமா.. அல்லது.......... யோசிக்கும் நேரம்.....

பீப்...பீப்...பீப்...பீப்...பீப்...        பீப்...பீப்...பீப்...பீப்...பீப்...   பீப்...பீப்...பீப்...பீப்...
அவள் கண்கள் சுருங்க என்னை பார்க்க..!

என்ன இழவு இது.. நேரம் கெட்ட நேரத்தில் இந்த காரில் இருந்து இப்படி ஒரு சத்தம்..??
எப்படி அணைப்பது என்றெண்ணி., கைக்கு கிடைத்த கார் பொத்தான்களை அழுத்த...
பீப்...பீப்...பீப்...பீப்...பீப்...        பீப்...பீப்...பீப்...பீப்...பீப்...   பீப்...பீப்...பீப்...பீப்...
சத்தம் நின்றபாடில்லை...!

என்ன செய்து சத்தத்தை நிறுத்திதொலைவது..!!!??
பீப்...பீப்...பீப்...பீப்...பீப்...        பீப்...பீப்...பீப்...பீப்...பீப்...   பீப்...பீப்...பீப்...பீப்...

மறுபடியும் கார் பொத்தான்களை அழுத்த ஆரம்பித்தேன்..!!
பீப்...பீப்...பீப்...பீப்...பீப்...        பீப்...பீப்...பீப்...பீப்...பீப்...   பீப்...பீப்...பீப்...பீப்...
சத்தம் நின்ற பாடில்லை...!!!

"அர்ரே பாஸ்.... your phone is ringing" என்று அந்த பெண் பேச ஆரம்பிக்க... அதுவும் ஆண் குரலில்... அதுவும் ஹிந்தியில்...!
அட கடவுளே...!

என்னை உலுக்கி எழுப்பிக்கொண்டிருப்பது., என் அறை நண்பன்...!!!
"என்ன உனக்கு இரவு ஒன்பது மணிக்கு எல்லாம் தூக்கம் ?
உன் போன் ரிங் ஆகுது பார்...!"
(ஒன்பது மணி தூக்கம்., அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு கனவில் மட்டும் சாத்தியம்..
காரணம்., இங்கு இரவு ஒன்பது மணிக்கு தான் இந்தியாவில் துயில் எழும் பெற்றோர், நண்பன், நண்பிகளிடம் பேசும் நேரம்...!!!)
சலித்துக்கொண்டே எழுந்து., கனவை கலைத்ததற்கு ஆத்திர நன்றி கூறினேன்.

கனவு.. பொய்.. காதல்.. கவிதை.. அழகு...இயற்கை....
இவையெல்லாம் மனித வாழ்கையை அழகாக்கி கொண்டிருப்பது, மடிக்கணினியின் மிதப்பில் இருக்கும் இவனுக்கு எப்படி புரியும் என்றெண்ணி என்னுள் சிரித்தேன்.

நானும் கவிதை எழுதிய காலங்கள் உண்டு..
அதையும் படித்து பாராட்டி தன் காதலிக்கு கொண்டு சென்று அன்பளித்த நண்பர்கள் இன்னும் என் நினைவில் இருக்கிறார்கள்...

அந்த கவிதைகளை அரங்கேற்றி., கால சக்கரத்தின் விளைவுகள் என்னவென்றுதான் பார்த்துவிடுமென்றோரு தைரியம்.

"செந்தமிழும் நா பழக்கம்" என்பதாகி., என் வலைத்தளத்தில் கவிதை என்ற போர்வை போத்திய கிறுக்கல்கள் இடம்பெற கண்டிருக்கலாம் நீங்கள்...

சற்றே என் வலை பதிப்புகளை அலங்கரிக்க., சில கவிதைகள் உங்களின் பார்வைக்கும்.

உங்களுக்கு தோன்றியதை., "Comments" பகுதியில் விட்டுசெல்ல மறக்க வேண்டாம்.

மீண்டும் சந்திக்கிறேன்.. கனவுகளோடு அல்ல... அனுபவங்களோடு...